நேற்று திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் மெய்நிகர் சந்திப்பை நடத்தியுள்ளார். அப்பொழுது இருவரும் ரஷ்யா உக்ரைன் போர் குறித்து விவாதித்தனர். உக்ரைனில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் இந்த நேரத்தில், இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
“உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிபர்களுடன் நான் பலமுறை தொலைபேசியில் பேசினேன். அமைதிக்கு வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி, உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புடினிடம் பரிந்துரைத்தேன்” என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா உக்ரைனுக்கு மருந்துகள் மற்றும் பிற நிவாரண பொருட்களை அனுப்பியுள்ள நிலையில், உக்ரைனில் உள்ள பொது மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்குவதற்கும் இந்தியா முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் பிரதமர் மோடி ஜோ பைடனிடம் கூறினார். உக்ரைன் விவகாரம் குறித்து இந்திய நாடாளுமன்றத்திலும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி மேலும் கூறினார்.
நேற்றைய மெய்நிகர் சந்திப்பின் போது இரு தலைவர்களும் கோவிட்-19 தொற்றுநோய், உலகளாவிய பொருளாதார மீட்பு, காலநிலை நடவடிக்கை மற்றும் தெற்காசிய மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் போன்ற பல பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவான கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். கடந்த சில ஆண்டுகளாகவே இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.