கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு, 56 ஆயிரம் கன அடிக்கு மேல், நீர்
திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா
வழங்க வேண்டும். இதில் இம்மாதம், 31.24 டி.எம்.சி., வழங்க வேண்டும் என,
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது, கர்நாடகாவில்,
தென் மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், கர்நாடகா வில்
உள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளுக்கு, நீர் வரத்து
அதிகரித்துள்ளது. இதில்,
ஹேரங்கி, கபினி அணைகள் நிரம்பி விட்டன. ஹேமாவதி,
கே.ஆர்.எஸ்., அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மழையின் தீவிரம் காரணமாக,
நான்கு அணைகளுக்கும் சேர்த்து, நேற்று வினாடிக்கு, 90 ஆயிரத்து, 190 கன அடி
நீர் வரத்து கிடைத்தது. அவற்றில் இருந்து வினாடிக்கு, 56 ஆயிரத்து 652 கன
அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக, கபினியில் இருந்து வினாடிக்கு,
36 ஆயிரத்து, 875 கன அடி; ஹேரங்கியில் இருந்து வினாடிக்கு, 13 ஆயிரத்து,
856 கன அடி நீர் திறக்கப்பட்டது.கர்நாடகாவில் இருந்து, காவிரி நீர் திறப்பு
அதிகரித்து உள்ளதால், தமிழகத்திற்கு வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. சேலம்
மாவட்டம், மேட்டூர் அணைக்கு, நேற்று மாலை நிலவரப் படி, 25 ஆயிரம் கன
அடிக்கு மேல் நீர்வரத்து கிடைத்தது. இன்று, நீர் வரத்து மேலும்
அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக, பொதுப்பணித் துறையினர் கூறியுள்ளனர்.
இதே நிலையில், நீர்வரத்து கிடைத்தால், இம்மாத இறுதிக்குள், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளது.
கர்நாடகா தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி. நீர் திறப்பு
Categories:
Uncategorized