பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.
மத்திய மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கிட வலியுறுத்தியும், நூறுநாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியான நான்கு மணிநேர வேலைக்கு முழு ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும், நூறுநாள் வேலைத்திட்டத்தின் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரிகரிக்க வலியுறுத்தியும், ஊராட்சிகளில் மட்டும் நூறுநாள் வேலை வழங்காமல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கும் விரிவுபடுத்திட வலியுறுத்தியும், அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25% நிதி ஒதுக்கிட வலியுறுத்தியும், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக தற்போதுள்ள மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தை திருத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் சார்பில் இன்று (07.07.2020) இந்தியா முழுவதும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும், மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் பழனி தாலுகா அலுவலகம் முன்பாகவும், மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி தலைமையில் தொப்பம்பட்டி ஒன்றியம் பொருளூர் கிராமத்திலும் போராட்டம் நடைபெற்றது. பழனியில் நடைபெற்ற போராட்டத்தில் நகர தலைவர் காளீஸ்வரி, செயலாளர் தங்கவேல், பொருளாளர் வெள்ளியங்கிரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
Categories:
Uncategorized