நேற்று தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து பயணிகள் அவதி

சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் 30-க்கும் மேற்பட்ட மின்சார
ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டதால் ரயில் பயணிகள் கடுமையாக
பாதிக்கப்பட்டனர்.
சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு
வழித்தடத்தில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள்
இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று கடற்கரை –
தாம்பரம் மார்க்கத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2.20 மணி வரையில்
30-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக
ஒரு மணி நேரத்துக்கு ஒரு மின்சார ரயில் விரைவுப் பாதை வழியாக
இயக்கப்பட்டது. இந்த ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்தி
இயக்கப்பட்டன. இதனால், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, பல்லாவரம்,
குரோம் பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக
இருந்தது. மின்சார ரயில்கள் குறைவாகவே இயக்கப்பட்டதால், கூட்ட நெரிசலில்
பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘சிக்னல் கோளாறு காரணமாக
சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் மின்சார ரயில்களின்
சேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. பராமரிப்பு பணி என கூறி
ஞாயிற்றுக்கிழமையும் 30-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை ரத்து
செய்யப்பட்டுள்ளது.
இதனால் 2 நாட்களாக நாங்கள் கடுமையாக அவதிப் பட்டு
வருகிறோம். எனவே, ரயில்களின் இயக்கத்துக்கு ஏற்றவாறு, நவீன தொழில்
நுட்பங்களை கையாண்டு சிக்னல் கோளாறு போன்ற தொழில்நுட்ப பிரச்சினைக்கு
தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *