நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷரீப் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். யார் இந்த ஷெபாஷ் ஷரீப்? பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரர்தான் இந்த ஷெபாஷ் ஷெரீப்.
இவர் ஒரு சிறந்த நிர்வாகத் திறன் படைத்தவர் என்று பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கருதுகின்றனர். சிறு வயதிலிருந்தே அரசியல் ஆர்வம் கொண்டவர். அதனால்தான் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன் சகோதரர் நவாஸ் ஷெரீபைப்போல அரசியலை தேர்ந்தெடுத்தார். 1990ல் முதல் முறையாக பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் ஷெபாஷ் ஷெரீப். 1997ஆம் ஆண்டு பாகிஸ்தானின் மிக முக்கியமான மாநிலமாக கருதப்பட்ட பஞ்சாபின் முதலமைச்சராக தேர்வானார். பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையை மாற்ற நவாஸ் ஷெரீப் முயல, அவரையும் அவரது தம்பியையும் ராணுவம் விரட்டிவிட்டு ஆட்சியை கையில் எடுத்தது. ஷெபாஷ் குடும்பத்தோடு சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றார். மீண்டும் 2007-ல் நாடு திரும்பியவுடன் அவர் தனது பதவியில் அமர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் உட்கட்டமைப்பை பெருமளவில் மேம்படுத்தினார். ஆயினும் ஊழல் புகார் காரணமாக நவாஸ் ஷெரீப் கட்சி 2017ஆம் ஆண்டு கலைக்கப்பட்டவுடன், அவருக்கு மாற்றாக பிரதமர் வேட்பாளராக களம் கண்டார் ஷெபாஷ். ஆனால் 2018 தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவராகச் தொடர்ந்தார். இவருடைய அரசியல் பார்வை நம்மை, இவர் சீனாவிற்கு ஆதரவானவர் என்றும் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றும் நினைக்க வைக்கின்றார். அவர் அளித்த பேட்டியில் கூட அமெரிக்காவுடன் நெருக்கமான உறவு வைத்திருப்பது பாகிஸ்தானிற்கு நல்லதல்ல என்ற கருத்து தெரிவித்தார். ஷெபாஷ் மேற்கொண்ட திட்டங்களுக்காக சீன அரசு இவருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சீனாவுடன் நெருக்கமாக இருப்போம் என்று ஷெபாஷ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.