பிட்கனெக்ட்டின் பிட்காய்ன் & பி.சி.சி- முதலீட்டில் ரூ.22,000 கோடி மோசடி

சூரத்: குஜராத்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள், வலைதளங்களில்
புழங்கும், ‘பிட்காய்ன்’ கரன்சியில் முதலீடு செய்து, 22 ஆயிரம் கோடி ரூபாய்
ஏமாந்தது அம்பலமாகியுள்ளது. இத்தொகை, கறுப்பு பணம் என்பதால், ‘திருடருக்கு
தேள் கொட்டியது’ போல, போலீசில் புகார் அளிக்காமல் உள்ளதாக பலர்
கூறப்படுகிறது.

கடந்த, 2016 நவ., 8ல் பணமதிப்பு நீக்க அறிவிப்பு
வெளியானது. இதையடுத்து, கூகுள் வலைதளத்தில், ‘கறுப்பு பணத்தை எப்படி
மாற்றலாம்’ என தேடியதில், குஜராத் மாநிலம் முதலிடத்தைப் பிடித்ததாக செய்தி வெளியானது.ஏராளமானோர், கறுப்பு பணத்தை பிட்காய்ன் கரன்சியில் முதலீடு
செய்தனர். இத்தகைய முதலீட்டிலும், குஜராத் முதலிடம் வகித்தது. கவர்ச்சி
திட்டங்கள் அந்தாண்டு இறுதியில், பிரிட்டனில், ‘பிட்கனெக்ட்’ என்ற வலைதள
நிறுவனம், வலைதள கரன்சி சந்தையை துவக்கியது. இந்நிறுவனம், கவர்ச்சிகரமான
திட்டங்கள் மூலம், பிட்காய்ன் முதலீட்டாளர்களை ஈர்த்தது.

‘பிட்காயினை
அடமானம் வைத்தால், தினமும், 1 சதவீதம் வட்டி தருவதாகவும், முதலீடு, 100
நாட்களில் இரு மடங்கு உயரும்’ எனவும் உறுதி அளித்தது. இந்த திட்டங்களில்
மூன்றாம் நபரை சேர்த்தால், கூடுதல் வட்டி தரப்படும் எனவும், பிட்கனெக்ட்
ஆசை காட்டியது. அடகு வைக்கும் பிட்காயினுக்கு ஈடாக, பி.சி.சி., என்ற வலைதள
கரன்சியை, பிட்கனெக்ட் வழங்கியது.பிட்காய்ன் முதலீட்டாளர்களுக்கு திரும்ப
அளிக்கும் அசல், வட்டி வருவாய் உள்ளிட்டவை, இந்த கரன்சி கணக்கில் தான் வரவு
வைக்கப்பட்டன.அதாவது, முதலீட்டாளர்களை பொறுத்தவரை, பிட்காயினில் முதலீடு
செய்வது போல தோன்றினாலும், அவர்களின் உண்மையான முதலீடு, பி.சி.சி.,
கரன்சியில் தான் நடைபெற்றது.இந்நிலையில், 2017ல், பிட்காய்ன், பி.சி.சி.,
கரன்சிகள் மதிப்பு, ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஆனால், இந்தாண்டு
துவக்கத்தில், பிட்காய்ன் மதிப்பு சரிந்தது. இதன் தாக்கத்தால், பி.சி.சி.,
உட்பட, இதர வலைதள கரன்சிகளும் வீழ்ச்சி கண்டன.

இத்துடன்,
பிரிட்டன் அரசின் நெருக்கடிக்கு ஆளான, பிட்கனெக்ட் நிறுவனம், திடீரென
வலைதள கரன்சி சேவை, கடன் பிரிவு ஆகியவற்றை மூடுவதாக அறிவித்தது.
முதலீட்டாளர்களுக்கு, பணம் திரும்பத் தரப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதற்கான அறிகுறி ஏதும் இல்லை. கடந்த ஆண்டு, பி.சி.சி.,
கரன்சிமதிப்பு, 437 டாலராக இருந்தது. இது, தற்போது, 30 டாலராக வீழ்ச்சி
கண்டுள்ளது.இதனால், பிட்கனெக்ட் மூலம் பிட்காயினில் முதலீடு செய்த,
குஜராத்தைச் சேர்ந்த பணக்காரர்களுக்கு மட்டும், 22 ஆயிரம் கோடி ரூபாய்
இழப்பு ஏற்பட்டுள்ளதாக, நிதிச் சந்தை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *