மீண்டும் கொரோனாவின் பிடியில் சிக்கித்தவிக்கும் சீனர்கள் பல ஆயிரம் வருடங்கள் முன் நடைமுறையிலிருந்த பண்டமாற்று முறைக்கு இப்பொழுது தள்ளப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா பெருந்தொற்று நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், சீனாவில் தொற்று வேகமாக பரவி வருகிறது இதன் காரணமாக சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளது. 2.5 கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரத்தில் லாக்டவுன் காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை பொருட்களை பெறுவது சிரமமாக உள்ளது. தேவையான நேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை. லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால் தேவையான பொருட்கள் சந்தைக்கு வருவதிலும் சிக்கல். இதனால் மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி தற்பொழுது பண்டமாற்று முறைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உதாரணமாக ஐஸ்கிரீம்-க்கு பதிலாக காய்கறி, வைனுக்கு பதிலாக கேக் என மக்கள் தங்களது தேவைக்கு ஏற்ப பொருட்களை மாற்றிக் கொள்கின்றனர். நெருக்கடியான சூழ்நிலையில் சண்டை போட்டுக்கொண்டு பொருட்களை வாங்குவதைக் காட்டிலும், இவ்வாறு பண்டமாற்று முறையில் தங்களுக்குத் தேவையானதை பெற்று மற்றவர்களுக்கும் உதவுவது ஆரோக்கியமானதாக உள்ளது என சீன மக்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.