வங்கிக் கடன் ஆசைகாட்டி அமிர்தா பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி பணம் பறிப்பு

அபிராமபுரத்தில் அமிர்தா பால் நிறுவன உரிமையாளரிடம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக ஆசைகாட்டி ரூ.1 கோடி ரூபாயுடன் ஓட்டம் பிடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஈரோட்டைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (55). இவர் சொந்தமாக அமிர்தா பால் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தை மேலும் விருத்தி செய்ய வங்கியில் கடன் வாங்க மோகனசுந்தரம் முயற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் அவரை காந்திலால், ராம்குமார் என்ற இரண்டு நபர்கள் அணுகியுள்ளனர். தாங்கள் மிகப்பெரிய ஏஜென்சியை நடத்துவதாகவும், பல நிறுவனங்களுக்கு வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வங்கிக் கடன் பெற ஏற்படும் தடங்கல்களைத் தாங்கள் நீக்கி கடன் வாங்கித் தருவதில் வல்லவர்கள் என்றும், நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் கடன் வாங்கித் தருவதாகவும் கூறி நம்ப வைத்துள்ளனர். காந்திலால், ராம்குமார் ஆகிய இருவரின் நடை, உடை, பேச்சு, பயன்படுத்திய சொகுசுக் கார் என அவர்களின் ஒட்டுமொத்த தோரணையைப் பார்த்து மோகன சுந்தரம் நம்பியுள்ளார். பின்னர் பலதரப்பு பேச்சுவார்த்தை அவர்களிடையே நடந்துள்ளது. மோகனசுந்தரத்திடமிருந்து ஆவணங்களைப் பெற்ற அவர்கள் அதற்கான நடைமுறைகளை முடித்துவிட்டதாகக் கூறியுள்ளனர். முதல்கட்ட நடவடிக்கை முடிந்துவிட்டதாக தெரிவித்த அவர்கள் ரூ.50 கோடி வங்கிக் கடன் பெற்றதாக சான்றிதழைக் காட்டி, முன் தொகையாக குறிப்பிட்ட தொகையைக் கட்ட வேண்டும் என்று ரூ. 1 கோடியை கொண்டு வரக் கூறியுள்ளனர். ராஜா அண்ணாமலைபுரத்தில் கற்பகம் அவென்யூவில் உள்ள குறிப்பிட்ட அலுவலகத்துக்கு கொண்டு வரும்படியும் அங்கிருந்து வங்கிக்குச் சென்றுவிடலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதை நம்பி ரூ.1 கோடியை மோகனசுந்தரம் கொண்டு வந்தார். கடன் பெறுவதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டது என்ற நம்பிக்கையில் ரூ.1 கோடி ரொக்கப்பணத்தை ஒரு சூட்கேஸில் வைத்து எடுத்துக்கொண்டு அவர்கள் கூறிய விலாசத்துக்கு நேற்று காலை 11.30 மணி அளவில் சென்றார். அவரை வாசலிலேயே வரவேற்ற இரண்டு பேரும், மேலே சென்று ஆவணங்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு நேராகச் சென்றுவிடலாம் என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு ரூமில் அவரை அமரவைத்து அவரிடம் பணத்தை வாங்கி அதை எண்ணுவது போல் நடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை அறையின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரம் கதவைத் தட்டிக் கூச்சலிட்டுள்ளார். அப்போது அந்த அபார்ட்மென்டின் அலுவலர் ஓடிவந்து பூட்டைத் திறந்து மோகனசுந்தரத்தை விடுவித்துள்ளார். இந்த அறையில் தங்கியிருந்தவர்கள் எங்கே என்று மோகனசுந்தரம் கேட்க “இந்த அறையில் யாரும் தங்கவில்லை. அறை எப்படி இருக்கிறது என்று பார்க்கத்தானே நீங்கள் மூவரும் வந்தீர்கள்” என்று அவர் எதிர்கேள்வி கேட்டுள்ளார். இது என்ன லாட்ஜா என்று கேட்டுள்ளார் மோகனசுந்தரம். “சார் இது ஒரு மருத்துவமனையின் சர்வீஸ் அபார்ட்மென்ட். சிகிச்சைக்கு வருபவர்கள் தங்குவதற்காக புக் செய்வார்கள். அந்த இருவரும், தங்கள் உறவினர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகக் கூறி தங்க வேண்டும் அதற்கு முன் இங்குள்ள வசதியைப் பார்க்கவேண்டும் என்று சாவியை வாங்கிச் சென்றார்கள்” என்று கூற, தான் வசமாக ஏமாற்றப்பட்டது மோகனசுந்தரத்திற்குப் புரிந்தது. பின்னர் இதுகுறித்து அவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வந்த காரின் எண்ணைச் சோதித்தபோது அது போலி எண் என்பது தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள், இரண்டு மூன்று முறை வந்தபோது அவர்கள் இருந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் சேகரிக்க போலீஸார் முயற்சி எடுத்து வருகின்றனர். ரூ.1 கோடி பணத்துடன் தப்பிச் சென்ற இருவரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பெங்களூருவில் தங்கள் அலுவலகம் உள்ளது என்று கூறியுள்ளதால் அங்கு ஒரு தனிப்படை சென்றுள்ளது.

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *