மேற்கு வங்கத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் ஒருவர் அங்கு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார்கள். இவரை பற்றி பிரதமர் மோடி பெருமையுடன் ட்வீட் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஆஸ்கிராம் தொகுதியில், கலிதா மஜி என்ற பெண்ணை பா.ஜ.க கட்சி வேட்பாளராகக் களம் இறக்கியுள்ளது.
கலிதா நான்கு வீடுகளில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வருகிறார். இதன் மூலம் மாதம் 2,500 ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்டுகிறார். இவரின் கணவர் குழாய் பழுது நீக்குபவர். இவர்களுக்கு 8-ம் வகுப்புப் படிக்கும் ஒரு மகன் உள்ளார். பணிபெண்ணாக வேலைபார்த்து வரும் கலிதாவுக்கு அரசியலில் ஆர்வம் அதிகம். இதனால் கடந்த ஐந்து வருடங்களாகத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் கடந்த 2018-ம் வருடம் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
கலிதாவின் அரசியல் ஆர்வத்தை அறிந்த பா.ஜ.கவினர் அவருக்கு ஆஸ்கிராம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளனர். தற்போது இந்தத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தேர்தலில் பணியாற்றுவதற்காக ஒரு மாதம் பணிக்கு விடுமுறை எடுத்துள்ள கலிதா மாஜி, மிகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன்மூலம் பலரின் கவனத்தையும் அவர் ஈர்த்து வருகிறார்.
கலிதாவின் அரசியல் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி, ‘மேற்கு வங்காளத்தின் ஆஸ்கிராம் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க வேட்பாளர் கலிதா மாஜி அரசியலில் ஒரு எடுத்துக்காட்டு. சுயகெளரவத்துடன் உழைத்து வாழும் கலிதாஜியின் அரசியல், சமூகத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையாக உருவாகியுள்ளது’ என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.