அண்டை நாடான பாகிஸ்தானின் வரலாற்றைப் பார்க்கும் பொழுது சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை எந்த ஒரு பிரதமரும் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை. இத்தகைய சூழலில் அந்த சாதனையை இம்ரான்கான் முடிவுக்குக் கொண்டு வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 2019ல் புதிய பாகிஸ்தான் படைப்போம் என்று கோஷமிட்டு ஆட்சியைப் பிடித்த இம்ரான்கான் இப்பொழுது பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் இம்ரான்கான் அரசு பதவி விலகியது. பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 342 பேரில் 174 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்ததால் இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார். இந்நிலையில் தனது ஆட்சி கவிழ்ந்ததில் அந்நிய நாட்டு சதி அதாவது அமெரிக்கா பின்னணியில் இருப்பதாக இம்ரான்கான் தொடர்ந்து சாடி வருகிறார். பாகிஸ்தான் நாட்டில் மீண்டும் ஒரு சுதந்திரப் போர் தொடங்கியுள்ளதாகவும் ஜனநாயகத்தை காக்க பொது மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் நாடு முழுவதும் திரண்டு வந்து வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ” அமெரிக்க ஆதரவுடன் இங்கு ஆட்சிமாற்றத்தை நடத்த சிலர் முயல்கின்றனர்.இங்கு உள்ள சிலரின் ஆதரவுடன் வஞ்சகர்களின் கூட்டத்தை ஆட்சிக்கு கொண்டுவர சிலர் முயல்கின்றனர். இதை எதிர்த்து வீதிகளில் வந்து போராடும் அனைத்து பாகிஸ்தான் மக்களுக்கும் நன்றி. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் போராட்டங்கள் பாகிஸ்தான் மக்கள் இதை நிராகரித்ததையே காட்டுகிறது”, என்று கூறியுள்ளார்.
நேற்று இரவு பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் அகமது தலைமையில் பிரம்மாண்டமான பேரணி ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஷேக் அகமது பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென கூட்டத்தில் ஒரு பகுதியினர், “சவுகிதார் சோர் ஹேர” (காவலரே ஒரு திருடன்) என்று முழக்கமிட தொடங்கினர். இம்ரான்கான் ஆட்சியை பாகிஸ்தான் ராணுவம் கையில் எடுத்துக் கொண்டதை மக்கள் விரும்பவில்லை என்பது போல் இந்த கோஷத்தை அவர்கள் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.