கட்டுமானம், செங்கல் சூளை உள்பட எந்தெந்த பணிகளை செய்யலாம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு.
சென்னை: தமிழகத்தில் கட்டுமான பணிகள், செங்கல் சூளை , 100 நாள் வேலை உள்பட பல்வேறு பணிகளை, சிவப்பு மண்டலம் அல்லாத மற்றும் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஊரடங்கில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் பேரில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஓர் இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. வணிக தளங்கள் மூடப்பட்டன. சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் மே மாதம் 3ம் தேதி வரை ஊரங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டது. எனினும் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு சில தளர்வுகளை அளிப்பது தொடர்பாக மாநில முதல்வர்கள் முடிவெடுக்கலாம் என்றும், எனினும் அதிகம் பாதிக்கப்பட்ட சிவப்பு மண்டல பகுதிகள், மற்றும் கொரோனா பாதித்த இடங்களுக்கு இது பொருந்தாது என மத்திய அரசு அறிவித்தது.
தமிழகத்தில் எண்ணெய், இரும்பு, சிமெண்ட், சர்க்கரை உள்பட சில தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி
அரசுக்கு பரிந்துரை
இதையடுத்து தமிழக அரசு எதற்கெல்லாம் விதி விலக்கு அளிக்கலாம் என்பது பற்றி ஆய்வு செய்ய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 21 பேர் கொண்ட சிறப்பு வல்லுநர் குழுவை அமைத்தது. இந்த குழுவும் பேரிடர் மேலாண்மை ஆணையமும் அரசுக்கு அண்மையில் அறிக்கை சமர்பித்தன. அதன்படி 100 நாள் வேலைக்கு அனுமதி உள்ளிட்ட சில பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மாஸ்க் அணிய வேண்டும்
ஊரக பகுதிகளில் நடைபெறும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளலாம். இப்பணிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே ஈடுபட வேண்டும். பணியில் ஈடுபடுவோர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். திட்டத்தில் பணிபுரியும் அனைவரும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்.
செங்கல் சூளை
ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், ஏரி , குளங்கள், கால்வாய்களை தூர்வாருவது, ஏற்கனவே நடந்து வரும் அணை பாதுகாப்பு, மேம்பாலம், மின்துறை சார்ந்த பணிகள், மருத்துவக்கல்லூரி கட்டுமானம் மேற்கொள்ளலாம், செங்கல் சூளை, குடிநீர் விநியோகம், தூய்மை பணிகள், தொலைப்பேசி அழைப்பின் பேரில் ஹார்டுவேர் பொருட்கள் விநியோகம், மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீதம் ஊழியர்களுக்கு மிகாமல் கொண்டு இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொருந்தாத பகுதிகள்
இவை அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், சிவப்பு மண்டல பகுதிகளுக்கு பொருந்தாது. மேலே உள்ள எந்த திட்டத்திற்கும் சிவப்பு மண்டல பகுதிகளில் அனுமதி கிடையாது. அதேநேரம் சிவப்பு மண்டலம் மற்றும் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் தான் இந்த பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பணிகள் நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories:
Uncategorized