![]() |
ஸ்ரீநகர் |
ஜம்மு – காஷ்மீரில், தாய் – தந்தையை இழந்த, ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகளை, முஸ்லிம்கள் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், லீவ்டோரா என்ற சிறிய கிராமத்தில் ஒரே ஒரு ஹிந்து குடும்பம் மட்டுமே உள்ளது; மற்ற அனைவரும் முஸ்லிம்கள். ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்த, பாபி கவுல், 40, என்ற பெண்ணின் கணவர், ஓராண்டுக்கு முன், உடல் நலக்குறைவால் காலமானார். இவர்களுக்கு, இரு பெண் குழந்தைகளும், இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். கணவர் இறந்ததை அடுத்து, பாபி கவுலும், அவரது குழந்தைகளும் வறுமையில் வாடினர்.
இதையடுத்து, அங்கு வசிக்கும் முஸ்லிம்கள், உள்ளூர், எம்.எல்.ஏ., உதவியுடன், பாபி கவுலுக்கு, அரசு வேலையை பெற்றுத் தந்தனர். ஆனால், பாபி கவுல், சமீபத்தில், நோய் பாதிப்பு காரணமாக, திடீரென மரணமடைந்தார். இதனால், அவரது நான்கு குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த, அனைத்து முஸ்லிம்களும் இணைந்து, அந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து, அவர்களை படிக்க வைப்பது என, முடிவு செய்தனர்.
தங்களிடமிருந்த அரிசி மற்றும் விளை பொருட்களை விற்று, அதில் கிடைத்த, 80 ஆயிரம் ரூபாயை, குழந்தைகளின் பெயர்களில் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர். குழந்தைகளின் பள்ளி படிப்பு, உணவு மற்றும் பராமரிப்பு செலவு முழுவதையும், கிராம மக்களே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து உள்ளனர். பாபி கவுல் வசித்த வீடு, சேதமடைந்திருந்ததால், அதை புனரமைத்து தந்துள்ளனர். DMRC
Categories:
Uncategorized