பயனுள்ள பயணம்

 

        நம் வாழ்வை சுவாரஸ்யமாக வைத்திருப்பது எது என்று கேட்டால், பணம், அன்பு, ஆன்மீகம், வேலை, குழந்தைகள், காதல் என்று பலதரப்பட்ட பதில்களை நாம் பெறலாம். பணம் ஓரிடத்தில் மட்டும் இருந்தால் அது சுவாரஸ்யத்தை தருமா? அன்பு ஒருவர் மீது மட்டும் இருந்தால் அது சுவாரஸ்யத்தை தருமா? எதுவாயினும் தனித்து இருந்தால் அதற்கு சுவாரஸ்யம் குறைவுதான். அனைத்தும் பகிரப்படவேண்டும். கொடுக்கும் அன்பு இரட்டிப்பாகும். கொடுக்கும் பணம் நிம்மதி தரும். பகிரப்படும் துன்பம் தன் தன்மையிலிருந்து குறையும். ஆக, எது சுவாரசியத்தை தந்தாலும் அதனை மேலும் சுவாரசியப்படுத்த மனிதர்கள் வேண்டும்.  அன்றாட வாழ்வில் நாம் எத்தனையோ மனிதர்களை கடந்து செல்கிறோம். எப்படியாவது கடந்து சென்றுவிட்டால் போதும்  என்று சிலரை எண்ணுவோம். சிலரோடு மட்டுமே உடன் பயணிக்க பிரியப்படுவோம். ஒரு நாள் பயணத்தில் நான் சந்தித்த ஒரு மனிதரைப் பற்றி இங்கு பகிர விழைகிறேன். 

        பொதுவாக காலை நேரப் பயணம் என்பது பெரும் பரபரப்பாகவே இருக்கும். அதுவும் காலை ஐந்து மணிக்கு அலாரம் அடித்ததில் ஆரம்பித்து, ஒரு மணி நேரத்தில் சமையல் முடித்து, ஆறு மணிக்கு குழந்தைகளை எழுப்பி, அவர்கள் சரியாக கண் விழிக்கும் வரை கலவரப்பட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் சகல வேலைகளையும் சீராக முடித்து, 7 மணிக்கு பள்ளிக்கு வேனில் பிள்ளைகளை ஏற்றிவிட்டு, மூச்சு விடவும் நேரமற்று, படுவேகமாக அடுத்த அரை மணி நேரத்தில் தானும் கிளம்பி, ஆட்டோ புக் செய்து, அந்த வண்டியில் ஏறும் போது இருந்த மனநிலை, மெதுவாக சுவாசிக்க மட்டுமே ஆசைப்பட்டது. அந்த சூழ்நிலை, சொல்லப்போகும் அந்த பயணத்தை ரசிக்கவும் இயலாத மன நிலையைதான் தந்திருந்தது. என்னை ஆசுவாசப்படுத்த மட்டுமே அந்த பயணத்தில் தொடர நினைத்தேன். இந்த வாழ்க்கை பல ஆச்சர்யங்கள் நிறைந்தது என்று நான் நினைக்கவில்லை, ஆட்டோ ஏறியபோது.  அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக்கொண்டே அப்பாவிற்கு போன் செய்தேன். நான்  பேச நினைத்ததோ அப்பாவிடம்,  ஆனால் சூழ்நிலை பேசவைத்ததோ ஆட்டோ ஓட்டுனரிடம். அப்படி என்ன பேசிவிட முடியும்? யாரென்றே தெரியாத ஒருவர்.  முன்பின் அறிமுகமற்ற ஒருவர்.  ஆனாலும் பேச்சு ஆரம்பித்தது ஒரு சின்ன யோசனையுடன்.  உண்மையில் வாழ்க்கை அத்தனை ஆச்சரியங்கள் நிறைந்ததுதான்.  எண்ணவில்லை இத்தனை நிறைவான எண்ணத்தோடு இந்த பயணம் முடியும் என்று . 

    அந்தக் காலை பயணத்தில் எத்தனையோ  மனிதர்கள் எங்களை அவ்வளவு அவசரத்தோடு கடந்து சென்றனர்.  சாதாரணமாக கடந்து போக வேண்டியதும் கூட நமது சூழ்நிலையின் காரணமாக வேறு ஒரு ரூபம் தரித்து ஏதேதோ நடந்து விடுகிறது.  எவ்வளவு சுலபமாகக் கடந்துவிடலாம் என உணர வைத்தது இந்த ஆட்டோ ஓட்டுநருடனான,  இல்லை இல்லை, இந்த  ஆட்டோ நண்பருடனான பயணம்.  ரசித்து செய்தால் வாழ்க்கை எவ்வளவு சுலபமானது. அனைவருக்கும் கண்கள் உண்டு.  ஆனால் அத்தனையையும் மாற்றுவது இந்தப் பார்வைதான். எதிரே நிற்கும் எதனையும் பார்த்து மலைக்காமல், கோபம் கொள்ளாமல் வருத்தப்படாமல், புன்னகைத்தால் எதையும் எதிர் கொள்ளலாம் எளிதாக.  வழிநெடுக இந்த ஆட்டோ தனக்குத் தந்ததை பகிர்ந்தாரே தவிர, இத்தனை நாள் கஷ்டப்பட்டு சம்பாதித்து என்று ஒருமுறையும் சொல்லவில்லை. இது சொல்லாமல் சொல்லியது ஒன்றை. இத்தனை சிரிப்பும் நேர்மறை எண்ணம் கொண்ட ஒரு நபர் என்று பெருமிதம் கொண்ட போது தன்  உடல்நிலை பற்றி பேச்சுவாக்கில் பகிர்ந்தார்.  உடலில் ஒரு அங்கம்தான் இந்த கைகால்கள் என்பது.  அவைகள் இன்றியும் வாழ முடியும் தன்னம்பிக்கை இருந்தால் என்பதை வார்த்தைகள் சொல்லவில்லை. காட்சிகள் பேசியது. 

        நண்பர் தனது ஆட்டோவின் மேற்கூரையில் அந்த எல்லையற்ற ஆகாயத்தை காண வசதி செய்திருந்தார். மேற்கூரையின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துவிட்டு அதற்கு பதிலாக அங்கு எளிதாக வானத்தை காணும்படியாக  கண்ணாடி போன்ற ஒன்றை அமைத்திருந்தார்.  ஆஹா இது போல் தானே வாழ்க்கையும்.  அடுத்தது என்ன என்பதை மறைக்கும் அளவிற்கு வாழ்வில் கஷ்டங்களும் துன்பங்களும் இருந்தாலும், அவற்றை விலக்கிவைத்துவிட்டு, எவர் ஒருவரால் தனது வாழ்க்கையை காண இயல்கிறதோ அவருக்கே அந்த எல்லையற்ற வானத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டும், இந்த ஆட்டோ நண்பரைப் போல.

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *