உக்ரேனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களை தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அங்கு கல்வி பயில்வதற்காக சென்ற பல வெளிநாட்டு மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். போர் சூழலுக்கு நடுவில் அங்கிருந்து வெளியேற வழி இல்லாமல் பொது இடங்களிலும் ரயில்வே நிலையங்களுக்கும் தஞ்சம் புகுந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவர்களை மீட்க பல முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக பல இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். பத்திரமாக தாயகம் திரும்பினாலும் அவர்களது கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கல்வி நிறுவனங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், போர் காரணமாக உக்ரைனில் இருந்து சுமார் 20 ஆயிரம் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் கல்வி தொடர முடியாமல் தாயகம் திரும்பி உள்ளதாகவும், அவ்வாறு நாடு திரும்பிய மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை ஒதுக்கி உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. அம்மாணவர்கள் உக்ரைனில் எந்த பாடப் பிரிவில் எந்த ஆண்டில் கல்வி பயின்றார்களோ அதையே இங்கேயும் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.