சென்னை: திமுக எம்எல்ஏ.,க்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மே 7-ம் தேதி அமைந்த அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்குவற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் அமைப்புகளும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவுகின்றன. தேர்தலுக்கு முன்பாகவே ‛ஒன்றிணைவோம் வா’ நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினோம். கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கி திமுக.,வினர் மேற்கொண்ட பணிகள் பொதுமக்களுக்கு பாதுகாப்பானதாக இருந்தது.
ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதி என உயிர்காக்கும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழகத்தின் சார்பில் ‛ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தை மீண்டும் துவங்கிட வேண்டும் என தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். சட்டசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது. பொறுப்புடனும், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும். நானும் தொண்டர்களை போலவே களத்தில் இருப்பேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.