அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே வெளியே வரவேண்டும்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர், ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியாக இருக்கும் சூழ்நிலையில், “வாக்குக் கணிப்பு”-“எக்சிட் போல்” என்ற பெயரில் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் செய்தித் தொகுப்புகள், கட்சி உடன்பிறப்புகள் யாருக்கும் எந்தவித மனசஞ்சலத்தையும் தரவில்லை என்பதைக் கேட்டுப் பெருமிதம் கொள்கிறோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் ஆலமரம் எந்த சலசலப்புக்கும் அசைந்துவிடாமல், அண்டிவந்தோர் அனைவருக்கும் வாழ்வளிக்கும் கற்பக விருட்சம் என்பதே உண்மை. தமிழ் நாடு முழுவதிலும் இருந்து வருகின்ற தேர்தல் பணிகள் குறித்த தகவல்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரலாறு வியக்கும் வகையில் இந்தத் தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்று அம்மாவின் அரசை அமைக்கும் என்றே உறுதிபடத் தெரிவிக்கின்றன.

கடந்த 2016 சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன் வந்த அனைத்து கருத்துக் கணிப்புகளும், வாக்கு கணிப்புகளும் அதிமுகவின் வெற்றியை குறிப்பிடவே இல்லை; மாற்று அணியே ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முதல் நாள் வரை சொல்லிக்கொண்டிருந்தன. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2016-ல் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில்,

கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வந்ததையும், பிறகு அதிமுகவும் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா ஆட்சி அமைத்ததையும் நாம் பார்த்தோம். இப்போது வெளியிடப்பட்டு வரும் கணிப்பு முடிவுகள் கட்சி உடன்பிறப்புகளை சோர்வடையச் செய்து, வாக்கு எண்ணிக்கையின் போது நமது செயல்பாடுகளை முடக்கி, நம்மை ஜனநாயகக் கடமை ஆற்றவிடாமல் செய்வதற்கான முயற்சிகளே தவிர வேறல்ல.

நம்மை சோர்வடையச் செய்வதற்கான சூழ்ச்சிகள் எதையும் நம்பிவிடாமல் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், முகவர்களும் வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதலே கவனமாக இருந்து விழிப்புடன் பணியாற்றுங்கள். ஒரு வாக்கு கூட நம்மிடம் இருந்து பறிக்கப்படாத வண்ணம் சுற்றிச், சுழன்று கடமையாற்றுங்கள்.

திமுக-வினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் திமுக-வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து தீர்வு காண வேண்டும்.

அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியே வர வேண்டும். எம்ஜிஆர் ஆட்சி அமைக்க முடியாது என்றும், ஜெயலலிதாவின் தோல்வி உறுதி என்றும் பகிரங்கமாக சத்தியம் செய்தவர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில், மக்கள் நம் இயக்கத்தை இமயத்தின் உச்சியில் வீற்றிருக்க வைத்தனர். அந்த நிலையே இப்போதும் தொடரப் போகிறது. கடமைகள் அழைக்கின்றன. கண்மணிகளே.. வெற்றிமலை சூடத் தயாராகுங்கள்”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *