நிர்பயா வழக்கில் அதிரடி.. கடைசி சீராய்வு மனுவும் தள்ளுபடி..

  நிர்பயா வழக்கில் அதிரடி.. கடைசி சீராய்வு மனுவும் தள்ளுபடி.. நாளை குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு.

டெல்லி: நிர்பயா பலாத்காரம்-கொலை வழக்கில், கடைசி சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், நாளை காலை 5.30 மணிக்கு 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்படுகிறார்கள்.

டெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயாவை 6 பேர் கும்பல் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்து ரோட்டில் வீசியது. தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும், நிர்பயா பரிதாபமாக பலியானார். நாட்டையே உலுக்கியது இந்த சம்பவம்.

குற்றச் செயலில் ஈடுபட்ட ஒரு சிறுவன் தனது 3 ஆண்டு சிறை தண்டனை முடிந்ததை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டான். முகேஷ் குமார் சிங் (22), பவன் குமார் குப்தா (25), வினய் சர்மா (26), அகஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, ராம் சிங் என்ற குற்றவாளி சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான்.
இதற்கிடையே, இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். ஆனால், சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து, தூக்குத்தண்டனை நிறுத்திவைக்ககோரி குடியரசு தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இந்த நிலையில் பலமுறை தூக்கு தண்டனைக்கான தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், கடந்த 5ம் தேதி முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் சிங் ஆகிய 4 பேருக்கும் வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய ஆணையை டெல்லி விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.

இந்த நிலையில் பவன் குப்தா தன் கடைசி சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 2012ஆம் ஆண்டு பவன் குப்தாவாகிய, தான், சிறுவனாக இருந்ததால், சிறார் சட்டத்தின் கீழ் தான் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பை வழங்கி இருக்க வேண்டும். அந்த சட்டத்தின் கீழ் தான் தனக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று வழக்கு, விசாரணைக்கு வந்தது. இந்த மறுசீராய்வு மனுவை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். ஏற்கனவே 3 முறை இவர்களுக்கு தூக்குத் தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கிறது, குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்கள் நிலுவையில் இருக்கிறது என்பது போன்ற காரணங்கள் கூறப்பட்டு இவ்வாறு 3 முதல் மூன்று முறை மரண தண்டனை தேதி மாற்றப்பட்டது.
ஆனால் கடைசி சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், நாளை காலை 5.30 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிடுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்காக டெல்லி திஹார் சிறையில் நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து வகைகளிலும் சிறைத்துறை இதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, நிர்பயாவின் தாய், உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ளார்.

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *