ரஜினி கட்சியின் பெயர் …

நடிகர் ரஜினி தனது கட்சியின் பெயர், சின்னம், எதிர்கால திட்டம் ஆகியவை
குறித்த முக்கிய அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக
அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

நாங்கள் மிகவும் வறுமையான நிலையில் இருந்து இந்த நிலையை
அடைந்திருக்கிறோம். இளமைக் காலத்தில் பேருந்து நடத்துநராக இருந்தபோதும்,
திரைப்படக் கல்லூரி நாட்களிலும் பட்ட கஷ்டங்களை அவர் மறக்கவில்லை.
தன்னைப்போல கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும்
என சொல்லிக்கொண்டே இருப்பார்.
அரசியலில் ஈடுபடப் போவதாக அவர்
அறிவித்திருப்பது, கோடிக்கணக்கான ரசிகர்களைப்போல எனக்கும் மிகுந்த
மகிழ்ச்சி அளிக்கிறது. கன்னட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக
அரசியல் தலைவர்கள் பலர் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்றுள்ளனர்.
தமிழகத்துக்கு மட்டுமின்றி, தான் பிறந்த கர்நாடக மாநில மக்களுக்கும் அவர்
நிச்சயம் நல்லது செய்வார். அவரது கனவுகள் நிறைவேறும்.

கர்நாடகா,
தமிழகம் இடையே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை எல்லாம்
ரஜினி நிச்சயமாக தீர்ப்பார். இரு மாநில மக்களையும், அரசியலையும் நன்றாக
தெரிந்தவர் என்பதால் அவரால் எளிதாக தீர்த்துவைக்க முடியும் என நம்புகிறேன்.
விரைவில் நடக்கவுள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி கவனம்
செலுத்துவாரா, ஏதேனும் அரசியல் கட்சியை ஆதரிப்பாரா என்பது குறித்து எனக்கு
தெரியவில்லை. தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. அவரது
முடிவை விரைவில் அறிவிப்பார் என நினைக்கிறேன்.
கட்சியின் பெயர்,
சின்னம், எதிர்கால திட்டம் குறித்து ரஜினி எப்போது அறிவிப்பார், அவரது
கட்சிக்கு என்ன கொள்கை என என்னிடம் பலர் கேட்கின்றனர். அதுபற்றி எனக்கு
தெளிவாக தெரியவில்லை. ஆனால், பொங்கல் தினத்தில் ரஜினி தனது கட்சியின்
பெயர், சின்னம், எதிர்கால திட்டம், கொள்கை உள்ளிட்டவற்றை வெளியிட வாய்ப்பு
உள்ளது.
அதற்கு முன்பாக நாடு முழுவதும் உள்ள ரஜினி ரசிகர் மன்றங்களை
ஒருங்கிணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்படும். தொண்டர்களின் எண்ணிக்கையை
அதிகரித்து, ரசிகர் மன்றங்கள் வலுப்படுத்தப்படும். இந்தப் பணிகள் முழுமையாக
முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை அவர் அறிவிப்பார்.
இவ்வாறு சத்தியநாராயண ராவ் கூறினார்.

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *