தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சதிவாரா என்ற தொலைதூர கிராமத்தில், கிராம பஞ்சாயத்து தலைவர் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற ஒரு தனித்துவமான முயற்சியைத் தொடங்கினார். பிளாஸ்டிக்கைக் கொடு, தங்கத்தை எடுத்துக்கொள் என்ற பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். அங்கு கிராம மக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பஞ்சாயத்து தலைவரிடம் தங்க நாணயம் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பரூக் அகமது கணாய், தொழிலால் வழக்கறிஞரும், சதிவார கிராமத்தின் சர்பஞ்ச் (தலைவர்), காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைவருக்கும் ஒரு உத்வேகமாக மாறியுள்ளார். ஒரு நாணயத்தைப் பெற, ஒரு நபர் 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைக்க வேண்டும். இந்த பிரச்சாரம் பிரபலமடைந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, முழு கிராமமும் பிளாஸ்டிக் இல்லாததாக அறிவிக்கப்பட்டது.
“எனது கிராமத்தில் பாலிதீன் கொடு, வெகுமதி பெறு என்ற முழக்கத்தை ஆரம்பித்தேன். ஆறுகள், ஓடைகளை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஊரில் உள்ள அனைவரும் அந்த இடங்களைத் தூர்வார உதவினார்கள். கடைசியாக ஜனவரி 7ஆம் தேதி துணை ஆணையர் அந்தப் பகுதியை பிளாஸ்டிக் இல்லாத பகுதி என்று அறிவித்தார். தங்க நாணயம், நாம் சேகரிக்கும் பிளாஸ்டிக்கில் இருந்து கிடைக்கிறது. விரைவில் பசுமையான கிராமமாக மாறுவோம். எனது கிராமத்தோடு நிற்காமல் யூனியன் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், பின்னர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு எடுத்துச் செல்வேன்.”, என்றார் ஃபரூக் அகமது கணாய்.